சென்னை: ஜெயலலிதா மீது திமுக அரசு தொடர்ந்த வழக்குகள் பொய் வழக்குகள், பழிவாங்கும் நடவடிக்கை என்ற எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிய அடுத்த சில நாட்களிலேயே, ராஜ்யசபா சீட் கிடைக்காததால், அதிமுகவிலிருந்து விலகிய வழக்கறிஞர் என்.ஜோதி, நேற்று தடாலடியாக திமுகவில் இணைந்தார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் ஜோதி. ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோரின் வழக்குகளை இவர்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.இவருடைய திறமையை மதித்து, ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பியாகவும் ஜோதியை ஆக்கினார். ஆனால் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் ஜோதிக்கு சீட் தரவில்லை. இதனால் கோபமடைந்த ஜோதி, திடீரென அதிமுகவிலிருந்து விலகினார்.
அதிமுக தொடர்பான வழக்குகளை இனிமேல் பார்க்கவும் மாட்டேன் என்றும் அறிவித்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, நம்பிக்கைத் துரோகி என்று வர்ணித்து ஜோதியை கடுமையாக சாடி அறிக்கை விட்டார். அவரை கட்சியை விட்டும் நீக்கினார்.இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதி, ஜெயலலிதா, சசிகலாவின் பிடியில் இருப்பதாக பேட்டி அளித்தார். மேலும், ஜெயலலிதா மீதான வழக்குகள் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, அனைத்தும் பொய் வழக்குகள் என்ற எனது கருத்தில் நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று தடாலடியாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கனிமொழி, மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.
கேள்வி - திறமையான வழக்கறிஞரான ஜோதியை, திமுக எந்தவிதத்தில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது?
கருணாநிதி - பொறுத்திருந்து பாருங்கள்.
No comments:
Post a Comment